Thursday, November 29, 2012

அவன்... அவள் ... அது...


உன் காதலை பெற.. 

எதாவது செய்யலாம் என்று நினைத்து..

ஏதேதோ செய்துபார்கிறேன்..

இப்போதுதான் தெரிகிறது..

உன்னை காதலிப்பதை தவிர 

வேறொன்றும் செய்ய தெரியவில்லை 

எனக்கு...

கூகிளில் சுட்ட கவிதையை  கார்டில் எழுதி எடுத்துகொண்டு அப்பாச்சி பைக்கை காற்றில் விரட்டி, காபி டே அடைந்தபோது மாலை 6 மணி இருக்கும். அது தீர்மானிக்கப்பட்ட நேரத்தை விடவும் அரை மணித்துளிகள் முன்னதாகவே இருந்தது..

அவன் நினைத்தது போலவே இருவர் மட்டும் இருக்கும் இருக்கையை தேர்வு செய்து கொண்டான். மெனு கார்டை இரண்டு முறை படித்து தான் என்ன ஆர்டர் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்து கொண்டே அனிச்சை செயலாய் அவன் தலைமுடி கோதிக்கொண்டான்.

மூன்றாவது முறையாய் மணி பார்த்து, வாசலில் மெல்லியதாய் கண்களை ஓடவிட்டு, மீண்டும் மெனுகார்டில் கண்களை புதைத்தான். அவன் எதையுமே படிக்கவில்லை என்பதை மூளை பலமுறை  சொல்லியும், கண்கள் கவனம்
கலைக்க மறுத்தது.

ஆண்களுக்கு அழகு அகம் என்பதை அறிந்து கொண்ட நாட்கள் தொட்டே அவன் பேச்சிலும், செயலிலும்  கம்பீரம் இருப்பதை அவன் அறிவான். இருப்பினும் இதுவரை இல்லாத ஒரு அசௌகரியம் இருப்பதாய் உணர்ந்தான்.

சௌகரியம் அவன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த  யமுனா என்ற அழகி வடிவில் பேரழகியாய் வந்து நின்றது..

பலமுறை பழக்கப்பட்ட பின்னரும், முழுவதுமாய் தரிசித்துவிட்டு அவள் முகம் பார்த்து சிரிக்கையில் அழகியின் பேச்சு ஆரம்பமானது...

எவ்ளோ 

நேரமாச்சு ?

130 ( நாள் ) * 24( நேரம்) = 3120 (நேரம்) என்று அவளை பார்த்த  முதல் நாள் முதல் இன்று வரையான நேரத்தை நகைச்சுவையாக சொல்லிக்கொண்டே  அவன் கொண்டுவந்த கார்டை அவளிடம் நீட்டினான்..

அவள் உன்னில் ஆரம்பித்து எனக்கு என்று அவன் கவிதை வரிகளை  முடிக்கையில் அவன் ஆயிரம் கவிதையை ரசித்தவனாக அவளின் அடுத்த வார்த்தைக்காக காத்திருந்தான்..

ஏன் 


இவ்ளோ........... 

நேரமாச்சு ?

என்று அவள் கேட்டுகொண்டே..
அவளுக்கான சம்மதத்தை அவள் பத்திரப்படுத்தி வைத்திருந்த அவன் முதல் கடிதத்தை பரிசளிப்பதன் மூலம் வெளிப்படுத்தினாள்...

பார்த்தவுடன் காதலில் நம்பிக்கை இல்லை..
எனவே என்னை  உன் நண்பனாக மட்டும் அனுமதி..
                                                                     
படித்துக்கொண்டே... அவன் அவள் கண்களை எதிர்நோக்க...

வெட்கப்பட்டுக் கொண்டே கண்களை மூடியது..  காதல் !!!

Sunday, November 11, 2012

மீண்டும் ஒருமுறை..

நீண்ட இடைவெளிக்கு பிறகு அவனையே  பார்த்து  கொண்டிருந்த   ஆறு வயது சிறுமியின் பெயர் அறிந்ததில் அவ்வளவு ஆச்சிரியம் சக்திக்கு.
" ஐ யம் சக்தி அங்கிள்" என்று அவள் சொன்னவுடன் தன் பெயரும் அதுவே என்பதை ஆர்வமுடன் பதிவு செய்து  கொண்டான். ரயில் பயணங்களில் இது போன்ற அழகிகளுடனான உரையாடல்கள் சுவாரசியம் தரும் என்பதை அவன் அறிந்திருந்தான். அவள் கன்னக்குழி அழகு, மெலிதான அவன் கிள்ளலில் மேலும் அழகானது. அவனை கிள்ளிய அவளின் எதிர்வினை மீண்டும் அவளை அழகாக்கியது. பள்ளி நண்பர்களையும், ஓவியங்கள் வரைந்ததையும், நாய் குட்டி பற்றியும் அவள் விவரித்தது ஏதோ ஒன்றை அல்லது ஒருவரை நினைவுபடுத்துவதாகவே உணர்ந்தான்.

அப்பாவை பற்றிய அவனது கேள்விக்கான பதில் அவனை நிலைகுலைய செய்யவே,  அருகிருந்த அவளது  பாட்டியிடம்  கூடுதல் தகவல்களை பெற்று அவளின் நிலைமையும், தேவதையை தரிசிக்க  தவறிய  அரக்கன் அவள்  தந்தை என்பதை உறுதி செய்து கொண்டான். இப்போது அவன் கைகள் அரவணைப்பதாய் அவளின் தலை வருடியது. தொடர்ந்த, அவன் வார்த்தைகளில் இறுக்கமும், இரக்கமும் இருப்பதை உணர்ந்தான். திடீரென்ற அவளது மகிழ்ச்சியும், இதழின் மலர்ச்சியும் அவள் கண் பார்த்துக்கொண்டிருந்த திசை மீது இவனை திருப்பியது. "அம்மா" என்று அவள் தூரத்தில் கைகாட்டி அழுத்தமாய் கூறியது "கடவுள்கள் அம்மாவாக உலவுகிறார்கள்.." என்று இவன் படித்த பேஸ்புக் வாக்கியம் நினைவுக்கு வந்தது.

 நிழல் உருவம் அருகில் வரவர நிஜமும் அருகில் வந்து அமர்ந்தது. அது கார்த்திகா என்பதையும், மகளுக்கும் அவளை போலவே கன்னகுழி இருப்பதையும், அவள் முன்னாளில் அவன் காதலி என்பதையும் அதுவரை அவன் அறிந்திருக்கவில்லை. அவன் நினைவுகளில் அழகாய் இருந்த அவளின்  கன்னக்குழி, இப்போது பெரும் சோகங்களையும், இறுக்கங்களையும் கொண்டிருக்கும் புதை  குழியாகவே தோன்றியது. நீண்ட பார்வை பரிமாற்றத்திற்கு பிறகு, அவள் எந்த உணர்வுகளையும் வெளிப்படுத்தாமல் குட்டி அழகியை தூக்கிகொண்டு நடக்கவே, அவன் நினைவுகளும் முன்னோக்கி நடந்தன..

நினைவுகள் ஏழெட்டு வருடம் முன்னோக்கி நகர, இருவரும் உயர் கல்வியை ஒன்றாக பயின்று கொண்டிருக்கையில் பதிவானது  அந்த காதல். இருவருக்கும்  காதலை பற்றிய தெளிவு, சமூகம் பற்றிய தெளிவை விட அதிகமாக இருந்தது. இறுதியில் சமூக கட்டமைப்பின் குழப்பமும்,  குடும்ப அமைப்பின் பயமுறுத்தல்களும் அவளை அந்த முடிவை நோக்கி நகர்த்தியது. அவன், கடைசியாக அவள் சொன்ன வார்த்தைகளை நினைவுகூர முயன்ற போது, "அங்கிள்" என்ற அந்த குட்டி அழகியின் வார்த்தை, அவனை நிகழ காலம் நோக்கி திருப்பியது.

இத்தனை நாள் அவனின் காத்திருப்புகான முடிவையும், குடும்பம், சமூகம் வாழ்கை பற்றிய அவனுக்கான தெளிவையும், குட்டி அழகியின் கன்னங்களில் முத்தமிட்டு, மீண்டும்  "ஐ லவ் யூ" என்று சொல்லி நிறைவு செய்தான்.

Friday, November 9, 2012

தேடல்

ஒரு காபி... ராம் சரவனபனில் ஆர்டர் செய்து கொண்டிருந்த போது  மல்லிகையின் மணம் அவனை  மினி  டிபன் வாங்கிக்கொண்டிருந்த  சிகப்பு தாவணியின் மீது நிலைபெற செய்தது. சற்றே பார்த்த முகமாக இருப்பதால்  அவன் கம்ப்யூட்டர்  மூளை அது யார் என்று கூகிள் பண்ணிகொண்டிருக்க தமிழ்  மேட்ரிமோனி , சர்ச் லிஸ்டில் முதலாவதாக வந்தது. ஒ அது  அவன் ரெகுஸ்ட் செய்து காத்துக்கொண்டிருக்கும் அதே பெண். சுடிதார் போட்டோவை விடவும் அதீத அழகு தாவணியில். அவள் கண்கள் அவன் எதிர் பார்த்ததை விட வசீகரமாக இருந்தது. அவள் காது மடல்களை பற்றி அவன் பெருமூளை கருத்து  சொல்லும்போது சிறுமூளை சுரீரென அவளுக்கான திருமண அடையாளங்களை தேட சொன்னது.தேடலின் வெற்றி கண்ட களிப்போடு அவன் உரக்க சொன்ன காபியில், அவள் கண்கள் அவனை பார்வையிட்டு திரும்ப அவளருகே  வேஷ்டியுடன் ஒருவன்..
தேடல் தொடரும்...