பெண்கள் பெரும்பாலும் வயிற்றின் வழியாகத்தான் ஆண்களின் இதயத்திற்குள் இலகுவாக நுழைந்து விடுகிறார்கள். அம்மாக்கள் மகன்களுக்கு நெருக்கமாக இருப்பதற்கு, அதுவும் கூட காரணமாக இருக்கலாம்.
பள்ளிக்கூட நாட்களில் எனக்கு வீடு திரும்ப, ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு உணவு(ம் ) காரணமாக இருக்கும்.
முட்ட போன்தாஸ் (கரண்டி ஆம்லெட் மாதிரி) தான் என்னோட நீண்ட கால பேவரிட்.
நாலு மணிக்கு வீட்டுக்கு வரும் போது, பசியை பையில போட்டுக்கிட்டு தான் வருவேன்.. கடையில எவ்வளவு கூட்டம் இருந்தாலும, அடுப்புக்கு வந்துருவாங்க அம்மா.
ஒரு பெரிய குழிக்கரண்டியில எண்ணெயை ஊத்தி, கங்குல வச்சுட்டு, கொஞ்சம் சிக்கன் கிரேவில ரெண்டு முட்டய கலக்கி, கொஞ்சம் மிளகை போட்டு கரண்டியில ஊத்துற சத்தம் கேக்கும் போது வந்துருவேன் நான்.
சோத்த போட்டு நான் திரும்புற நேரத்துல, டைனோசர் முட்ட சைஸிலா பொன்னிறமா போன்தாஸ் என் தட்டுல விழுந்திருக்கும்..
ரசிச்சு ருசிச்சு நான் சாப்பிடுறத கூட பாக்காம, மறுபடியும் கடைக்கு போயிருவாங்க அம்மா..
யாரு போனா என்னான்னு சாப்பிட்டுக்கிட்டே இருப்பேன் நான்..