Sunday, May 28, 2017

மதுரை - மீனாட்சி - அழகர்

மதுரைக்குத் தெற்கே
மழை பெய்யாக் கானலிலே
தரிசாக் கிடக்குதுன்னு - மீனாள்
சம்பாவ விட்டெறிஞ்சா..

அள்ளி விதை பாவி -மீனாள்
அழகு மலை தீர்த்தம் வந்து
வாரி விதை பாவி -மீனாள்
வைகை நதித் தீர்த்தம் வந்து
சம்பா கதிரடித்து -சொக்கர்
தவித்து நிற்கும் வேளையிலே
சொர்ணக்கிளி போல -மீனாள்
சோறு கொண்டு போனாளாம்

நேரம் ஆச்சுதென்று -சொக்கர்
நெல்லெடுத்து எறிந்தாராம்.
அள்ளி எறிந்தாராம்
அளவற்ற கூந்தலிலே
மயங்கி விழுந்தாளாம் -மீனாள்
மல்லிகை பூ மெத்தையிலே
சோர்ந்து விழுந்தாளாம்
சொக்கட்டான் மெத்தையிலே..

அழுத குரல் கேட்டு
அழகர் எழுந்திருந்து
வரிசை கொடுத்தாராம்
வையகத்தில் உள்ளமட்டும்
சீரு கொடுத்தாராம்
சீமையிலே உள்ளமட்டும்
மானா மதுரை விட்டார்
மதுரையிலே பாதி விட்டார்.
தல்லா குளமும் விட்டார்
தங்கச்சி மீனாளுக்கு
தளிகையிலே பாதிவிட்டார்..

                           - பண்பாட்டு அசைவுகளில் இருந்து..
#மதுரை  #மீனாட்சி #அழகர் 

Tuesday, May 16, 2017

ஓநாய் குலச்சின்னம்..

டெஞ்சர் - மங்கோலிய மேய்ச்சல் நிலத்தின் கடவுள். இங்கு புல்லும் மேய்ச்சல் நிலமும் தான் பெரிய உயிர்கள். மங்கோலியர்களுக்கு புல்லை விட எதுவும் இரக்கத்திற்கு உரியதல்ல.

ஓநாய்கள் - மாயாஜால மிருகங்கள். மேய்ச்சல் நில காவலர்கள். குலச்சின்னம். உலகம் வென்ற ஜெங்கிஸ்கான் போர் கலைகளை ஓநாய்களுடமிருந்துதான் கற்றிருக்க கூடும்.

ஓநாய்களின் ஆளுமை வசியத்திற்கு ஆட்ப்பட்டு,  ஓநாய் குட்டியை வளர்ந்து, அதை அவனே கொன்ற  ஒரு சீனனின் கண்ணீர் களம்.

கதை முழுதும் ஆளுமை செய்கிற,  நம் கண் முன்னே வீரனாகவும், விவேகியாகவும் வந்து பதிகிற  ஓநாய்கள். குட்டியாய் கதையில் வந்து, நாய்களை போல் அடிமையாய் வாழாமல்,  சுதந்திரத்திக்காய் உயிரையும் விடுகிற ஓநாய்.

வேட்டை நாய்க்கள், மர்மோட்டுகள், முயல், எலி, குதிரை, ஆடு, அன்னம், காட்டு வாத்து  என ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்லிப் காணாமல் போகும் சோகம்.

மேலே சொல்லப்பட்ட ஒவ்வொன்றையும், மெல்லமாக படுகொலை செய்த நவீனத்துவத்தின்  வன்முறை.. மனிதனே பிரதானமானவன் என்கிற மாவோவின் சிந்தனை..

கதை வழியே காட்சி படுத்த பழகிவிட்டால்,  ஓநாய் குலச்சின்னம்  நிச்சயம் ஒரு தவிர்க்க முடியாத வாசிப்பு அனுபவம்..





Tuesday, May 9, 2017

நினைவலைகள்-1

நினைவலைகள்..

அப்போ எனக்கு மூணு வயசிருக்கும்.. விடியகாலை நாலு மணிக்கு வாரிச்சுருட்டி அப்பாவும், அம்மாவும் எந்திரிக்க, ஏங்கூட சேந்து ஒன்றரை வயசு தங்கச்சியும் எழுந்துகிட்டா..

அப்ப நாங்க மொட்டை மாடி கூரை வீட்ல தங்கியிருந்தோம். கொட்டாய் விட்டுக்கிட்டே, கூரை வழியா வானத்தை பாக்குறேன், அது ஒரே கருப்பா மழ வரமாரி இருக்கு. அவசர அவசரமாய் ரெண்டு பெரும், ரெண்டு பெரிய்ய்ய்ய கொடத்தோட, நல்ல தண்ணி எடுக்க கெளம்பிட்டு இருந்தாங்க..

பிள்ளைகளை ஒத்தையில விட்டுட்டு போர பதட்டம் அம்மாவுக்கு கொஞ்சம் அதிகமாவே இருந்துச்சி..

அதுக்கப்புறம் இருபத்தஞ்சு வருஷம்..

அதே நாலு மணி..
வேற வேற இடம்..
வேற வேற தேவை..
ஆனா அதே உழைப்பு..

கடைசியா ரிலாக்ஸா நாலஞ்சு வருஷம் ஓடிக்கிட்டு இறுக்கப்ப..

திடீர்னு அதே உழைப்பு..  

நல்ல வேளை அய்யனாரு அம்புட்டையும் நிறுத்திட்டறாரு..

உழைத்தே பழகிய இருவரில்
இன்றும்
ஓய்வெடுக்க மனமில்லாமல்
ஒருவர்..
ஓய்வெடுக்க வழியில்லாமல்
இன்னொருவர்..

அப்பா = அம்மா  =  உழைப்பு

நூறு வருடம்
மன நிறைவோடும்,
மகிழ்ச்சியோடும்
நீங்கள் வாழ வேண்டும்
என்ற விருப்பத்தோடு
திருமண நாள் வாழ்த்துக்கள்..