Saturday, December 29, 2012

காதல் ஒரு ஆச்சரியம்!!!



முத்தங்களில் முழுவதுமாய் கரைந்து..  

உச்சி வருடையில் உயிர்  நீட்டிப்பிற்கான அர்த்தம் அறிந்து..

அங்க அசைவுகளில் ஆர்வத்தின் ஆழம் புரிந்து 

அழுகும் போதெல்லாம் அன்பின் முதிர்ச்சி முகர்ந்து..

இமை இசையில் இளைப்பாறி..

இதழ் மௌனங்களில்  கலவரமாகி..

எப்போதுமே கனவில் விழுந்து,

எப்போதாவது  காலிலும் விழும்

இந்த காதல் தான் எவ்வளவு ஆச்சிரியமானது !!!   

Saturday, December 15, 2012

கண்ணீர் மருந்து..


கதறி அழுதுகொண்டிருந்த கூட்டத்தை விலக்கிக் கொண்டு ராம் தன் தாத்தாவின் தலைமாட்டின் அருகே அமரும் போது மாலை ஆறு மணி இருக்கும்.  கூட்டம் முழுவதும் சென்னையிலிருந்து வந்திருங்கிய ராம் மீதே கவனம் கொண்டிருக்க ராமின் கவனம் மட்டும் தாத்தாவின் மீதே இருந்தது.

மரணப்படுக்கை பற்றியும் மரணம் பற்றியும் அவன் நினைத்து வைத்திருந்த அனைத்தும் எதார்த்தத்தில் வேறு ஒன்றாய் இருந்தது. மௌனமாய் தன் தாத்தாவின் கண்களை பார்த்துகொண்டிருக்க..

தம்பி.... தாத்தா இப்படி சாஞ்சிடாரே... நேத்துகூட தன் பேரனை பத்தி பேசினாரே... என்று  அழுதுகொண்டே, பாட்டி அவன் அருகில் வர, சூழல் வேறு ஒன்றாய்  மாறிக்கொண்டே இருந்தது..

ஒரு வார காலமாய் தாத்தாவிற்கு உடல் நிலை சரியில்லை என்பதும் , தீடீரென்ற அவர் உணவு,உரையாடல்களை நிறுத்தி கொண்டதையும் அங்கங்கே   பேச்சுக்கள்  உறுதி செய்துகொண்டிருந்தன.

பாட்டி தொடர்ந்து பேரனுக்கும், தாத்தாவுக்குமான உறவின் நெருக்கத்தை சொல்லிக்கொண்டே தன் மரண வாழ்த்து பாடலை பாடிக்கொண்டிருந்தாள்..

ஏன்யா... பாசமா வளத்த பேரனை பாக்கலையா...

தூக்கி வளர்த்த பேரன் இப்ப தூக்கி போக வந்திருக்கான்..

ஊட்டி வளர்த்த பேரன் இப்ப பாலுட்ட வந்திருக்கான்...

பாட்டியின் ஓலத்தை கேட்டுகொண்டுகொண்டே,
அவனின் உத்தரவுக்கு காத்திராமல் கண்கள் கண்ணீரை கொட்டிக்கொண்டிருக்க,  நினைவுகள் தாத்தாவின் கைபிடித்து நடந்த நாட்களை நோக்கி நகர்த்திக்கொண்டு இருந்தது..

அதுவரை சலனமற்று இருந்த தாத்தாவின் கண்கள், உயிர்பெற்றதை அவனால் உணர முடிந்தது. அவன் தாத்தாவின் கண்களையே உற்று நோக்க அது கண்ணீரால் பேசிக்கொண்டிருந்தது..

மெல்ல மெல்ல தாத்தாவின் தளர்ந்த கைகள் உயிர்பெற்றுகொண்டிருக்க ராம் ஆச்சிரியத்தில் நெகிந்து கொண்டிருந்தான். திடீரென்று, முழுவதும் உயிர் பெற்றதாய்  தாத்தாவின் வலது கை பேரனின் கண்ணீரை துடைக்க..  அழுதுகொண்டிருந்த கூட்டம் அப்படியே ஆச்சிரியத்தில் உறைந்து போயிருந்தது..

அழுகைகள்  ஆச்சிரியமாய் போகும் நேரங்களும், கண்ணீர் மருந்தாகிப் போகும் மாயங்களும் உணர்வுகளின் ஒன்றுதலில் நடந்துகொண்டேதான் இருக்கும்...


Friday, December 7, 2012

டைரியின் பக்கங்கள்...


டைரி 11-04-2010  10 PM

இன்று என் வாழ்கையின் மிக அழகான நாள். காலை 6 மணிக்குதான் இந்த உலகம் என் தேவதையை தரிசித்தது.

மலரினும் மெல்லியவள்  என்னவள்,,
அவளினும் மெல்லியதாய் என் மகள்..
அவளை போலவே மெல்லியதாய் அவள் அழுகையும்..

டாக்டர்  என்  கையில் அவளை கொடுத்ததும், இதுவரை நான் கண்டிறாத என் கண்ணீர்தான் அவளுடனான முதல் ஸ்பரிசம்.. 

திருமணமான ஏழாவது வருடத்தில் இவள் எங்களுக்கு கிடைத்தது கூட என் கண்ணீருக்கு காரணமாக இருக்கலாம். பல நேரங்களில் காத்திருப்புக்கான காரணங்களை இயற்கை இப்படிதான் ஈடு செய்கிறது. 

நீண்ட நேரம் ரசித்துவிட்டு.. அவளுக்கான முதல் முத்தத்தை என் முரட்டு மீசையீன் வன்முறையோடு பதிவு செய்தேன். அவள் கை, கால்களை உதறி  என் முத்தம் ஏற்கப்பட்டதை உறுதி செய்தாள்.

சார்.. உங்க மனைவி கன்முளிசிட்டாங்க.. என்று நர்ஸ் சொன்னதும், இதுவரை ஏங்கி தவித்துகொண்டிருந்த தருணங்கள் என்னை அவள் அறை நோக்கி தள்ளியது. எங்களை எதிர்பார்த்திருந்தவலாய் என்னவள் புன்னகைக்க..  எங்கள் தேவதையை அவளிடம் காட்டினேன்.

அவளை வாங்கி மார்போடு அணைத்துக்கொண்டு, முழுவதுமாய் முத்தத்தில் நனைத்துவிட்டு.. கண்ணீர்  கலந்த கண்களோடு   என் கண்ணத்தில் முத்தமிட்டாள்..

மனைவி கணவனுக்கு  இரண்டாம் தாய்..

கணவன் மனைவிக்கு முதல் குழந்தை... 

எப்போதோ படித்த வாசகம்... மூளையில் இடம் வலமாக ஓடியது.... 

Tuesday, December 4, 2012

நிச்சயிக்கப்பட்ட காதல் திருமணம்...

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின் ராம் அந்த ஊருக்கு செல்வது இது இரண்டாவது முறை..

சுற்றிலும் வயல்வெளி அறுவடைக்கு தன்னை தயார் படுத்திக்கொண்டு இருந்தது. அம்மாவின் ஊராய் இருந்தாலும் கிராமம் அவனுக்கு அவ்வளவு பரிச்சமில்லை. தஞ்சாவூரிலிருந்து அந்த கிராமத்திற்கு மினி பஸ்ஸில்  ஏறியபோது முற்றிலும் வேறு உலகத்திற்கு பயணிப்பதாய் உணர்ந்தான்.

யாழினியை சந்திக்க போவதை நினைத்துக் கொள்ளும் போதெல்லாம், அவன் பார்க்கும் எல்லா முகங்களும் அழகாவே தெரிந்தது. அவளுக்கு வாங்கிய அழகிய மொபைல் போனை  பார்த்துக்கொண்டே பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய போது அங்கே யாழினி கல்லூரி பேருந்துக்காக நின்று கொண்டிருந்தாள்.

கல்லூரி பேரசிரியையாய் சேலையில் அவ்வளவு அழகு. சற்றே எதிர்பாராமல் ராமை சந்தித்ததில் மகிழ்ச்சியும் ஒரு வித படபப்பும் அவள் கண்களை உயிர்புள்ளதாய் மாற்றியது. இருவரின் பார்வை புன்னகையும் பரிமாறி கொண்டவுடன் ஆரம்பமானது அந்த அழகிய உரையாடல்.

அவள் : (ஆச்சிரியத்துடன்)  எங்கே இவ்ளோ தூரம் ?

அவன் : அம்மா குலசாமி சாமி கும்பிட்டு வரசொன்னாங்க. இங்க பாத்தா,, இறங்கியவுடன் தேவதை தரிசனம்...

அவள் : (சிறு புன்னகை பாய்ச்சிவிட்டு)  உண்மையை சொல்லுங்க...

அவன் : உண்மையில் யாழினி தரிசனத்திற்காக மட்டும் தான் வந்தேன்..

அவள் : (வெட்க புன்னகையுடன்) அதுதான் தரிசனம் கிடைச்சாச்சே.. கிளம்புங்க..

அவன் : அம்மனுக்கு ஆராதனை, அர்ச்சனை எல்லாம் வேண்டாமா ?
(மொபைல் போனை நீட்டி) வாழ்கையில் எப்போதாவது  காதல் வருமா  என்று நிறைய தடவ நெனச்சிருக்கேன்.  ஆனா அது எனக்கு நிச்சயிக்கப்பட்ட போன்னு கூடவே வரும்னு நினைக்கல..  ஐ லவ் யூ..

அவள் : (வெட்கப்பட்டு, சிரித்து, காதல் பார்வையோடு.. ) . தேங்க்ஸ்.. மொபைல் நல்லா இருக்கு.. ஆனா  நீங்க பேசுறத பாத்தா உங்களுக்கு நிறைய அனுபவம் இருக்கும் போல இருக்கே..

அவன் :அட நீ வேற.. நான் இவ்ளோ பேசுவேன் என்று இன்னைக்கு உன்னை பார்க்கிற வரைக்கும் தெரியாது..  சில நேரங்களில்  நம் உதடுகள் நம் இதயங்கள் பேசுவதை சொல்லிவிடும்..

அவள் :  ஒ.. உங்க இதயம் என்னை காதலிகிறேன்னு சொல்லுதா... அதுகிட்ட ஏன்னு கேட்டு சொல்லுங்க ?

அவன் :  அது  சொல்லுது..  உன்னை விட அழகியை  அது  இன்னும் உலகத்தில் பாக்கலையாம்..  அது மட்டும் இல்லாம, உன்ன பத்தி நினைக்கும் போதெல்லாம் "உங்களில் யார் அடுத்த பிரபுதேவா" ப்ரோக்ராம்ல அது டான்ஸ் ஆடுற மாதிரியே இருக்காம்..

அவள் : (சிரித்துக்கொண்டே).. பரவாயில்லையே உங்க இதயம் பேச மட்டும் தான் செய்யும்னு நினைச்சேன்.. டான்ஸ் கூட ஆடுமா..?

அவன் :  டான்ஸ் மட்டுமா... பாட்டு கூட பாடும்.. இப்ப என்ன பாடுதுன்னு கேட்குதா? "சேலை கட்டி வந்த நிலவோ.. ஆடை கட்டி வந்த மலரோ.."

அவள் :  (ரசித்துகொண்டே)   உங்க இதயத்துக்கு பழைய பாட்டுதான் தெரியுமா?

அவன் : ஹே.. இது புதுசா ரிலீஸ் ஆகபோற ரீமிக்ஸ் பாட்டாம்..

அவள் : ஐயோ!! ஸாரி.. ஸாரி.. ரொம்ப நேரம் நின்னுன்னுகிட்டே  பேசிட்டிருகோம்.. வாங்க வீட்டுக்கு போவோம்.. ஹ்ம்ம்.. அப்பா கேட்டா நான் என்ன சொல்ல ? உண்மைய சொல்லுங்க.. எதுக்காக இந்த விசிட்?

அவன்: (சிரித்துகொண்டே) உண்மையில் உன்னை பார்கத்தான் வந்தேன்.. அப்பாவுக்காக நம்ம கல்யாண பத்திரிக்கை கொண்டு வந்திருக்கேன்..

இருவரும் கவிதையாய்  பேசிக்கொண்டே நடக்க... ரசித்துக்கொண்டே பின்தொடர்ந்தது காதல்...

Thursday, November 29, 2012

அவன்... அவள் ... அது...


உன் காதலை பெற.. 

எதாவது செய்யலாம் என்று நினைத்து..

ஏதேதோ செய்துபார்கிறேன்..

இப்போதுதான் தெரிகிறது..

உன்னை காதலிப்பதை தவிர 

வேறொன்றும் செய்ய தெரியவில்லை 

எனக்கு...

கூகிளில் சுட்ட கவிதையை  கார்டில் எழுதி எடுத்துகொண்டு அப்பாச்சி பைக்கை காற்றில் விரட்டி, காபி டே அடைந்தபோது மாலை 6 மணி இருக்கும். அது தீர்மானிக்கப்பட்ட நேரத்தை விடவும் அரை மணித்துளிகள் முன்னதாகவே இருந்தது..

அவன் நினைத்தது போலவே இருவர் மட்டும் இருக்கும் இருக்கையை தேர்வு செய்து கொண்டான். மெனு கார்டை இரண்டு முறை படித்து தான் என்ன ஆர்டர் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்து கொண்டே அனிச்சை செயலாய் அவன் தலைமுடி கோதிக்கொண்டான்.

மூன்றாவது முறையாய் மணி பார்த்து, வாசலில் மெல்லியதாய் கண்களை ஓடவிட்டு, மீண்டும் மெனுகார்டில் கண்களை புதைத்தான். அவன் எதையுமே படிக்கவில்லை என்பதை மூளை பலமுறை  சொல்லியும், கண்கள் கவனம்
கலைக்க மறுத்தது.

ஆண்களுக்கு அழகு அகம் என்பதை அறிந்து கொண்ட நாட்கள் தொட்டே அவன் பேச்சிலும், செயலிலும்  கம்பீரம் இருப்பதை அவன் அறிவான். இருப்பினும் இதுவரை இல்லாத ஒரு அசௌகரியம் இருப்பதாய் உணர்ந்தான்.

சௌகரியம் அவன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த  யமுனா என்ற அழகி வடிவில் பேரழகியாய் வந்து நின்றது..

பலமுறை பழக்கப்பட்ட பின்னரும், முழுவதுமாய் தரிசித்துவிட்டு அவள் முகம் பார்த்து சிரிக்கையில் அழகியின் பேச்சு ஆரம்பமானது...

எவ்ளோ 

நேரமாச்சு ?

130 ( நாள் ) * 24( நேரம்) = 3120 (நேரம்) என்று அவளை பார்த்த  முதல் நாள் முதல் இன்று வரையான நேரத்தை நகைச்சுவையாக சொல்லிக்கொண்டே  அவன் கொண்டுவந்த கார்டை அவளிடம் நீட்டினான்..

அவள் உன்னில் ஆரம்பித்து எனக்கு என்று அவன் கவிதை வரிகளை  முடிக்கையில் அவன் ஆயிரம் கவிதையை ரசித்தவனாக அவளின் அடுத்த வார்த்தைக்காக காத்திருந்தான்..

ஏன் 


இவ்ளோ........... 

நேரமாச்சு ?

என்று அவள் கேட்டுகொண்டே..
அவளுக்கான சம்மதத்தை அவள் பத்திரப்படுத்தி வைத்திருந்த அவன் முதல் கடிதத்தை பரிசளிப்பதன் மூலம் வெளிப்படுத்தினாள்...

பார்த்தவுடன் காதலில் நம்பிக்கை இல்லை..
எனவே என்னை  உன் நண்பனாக மட்டும் அனுமதி..
                                                                     
படித்துக்கொண்டே... அவன் அவள் கண்களை எதிர்நோக்க...

வெட்கப்பட்டுக் கொண்டே கண்களை மூடியது..  காதல் !!!

Sunday, November 11, 2012

மீண்டும் ஒருமுறை..

நீண்ட இடைவெளிக்கு பிறகு அவனையே  பார்த்து  கொண்டிருந்த   ஆறு வயது சிறுமியின் பெயர் அறிந்ததில் அவ்வளவு ஆச்சிரியம் சக்திக்கு.
" ஐ யம் சக்தி அங்கிள்" என்று அவள் சொன்னவுடன் தன் பெயரும் அதுவே என்பதை ஆர்வமுடன் பதிவு செய்து  கொண்டான். ரயில் பயணங்களில் இது போன்ற அழகிகளுடனான உரையாடல்கள் சுவாரசியம் தரும் என்பதை அவன் அறிந்திருந்தான். அவள் கன்னக்குழி அழகு, மெலிதான அவன் கிள்ளலில் மேலும் அழகானது. அவனை கிள்ளிய அவளின் எதிர்வினை மீண்டும் அவளை அழகாக்கியது. பள்ளி நண்பர்களையும், ஓவியங்கள் வரைந்ததையும், நாய் குட்டி பற்றியும் அவள் விவரித்தது ஏதோ ஒன்றை அல்லது ஒருவரை நினைவுபடுத்துவதாகவே உணர்ந்தான்.

அப்பாவை பற்றிய அவனது கேள்விக்கான பதில் அவனை நிலைகுலைய செய்யவே,  அருகிருந்த அவளது  பாட்டியிடம்  கூடுதல் தகவல்களை பெற்று அவளின் நிலைமையும், தேவதையை தரிசிக்க  தவறிய  அரக்கன் அவள்  தந்தை என்பதை உறுதி செய்து கொண்டான். இப்போது அவன் கைகள் அரவணைப்பதாய் அவளின் தலை வருடியது. தொடர்ந்த, அவன் வார்த்தைகளில் இறுக்கமும், இரக்கமும் இருப்பதை உணர்ந்தான். திடீரென்ற அவளது மகிழ்ச்சியும், இதழின் மலர்ச்சியும் அவள் கண் பார்த்துக்கொண்டிருந்த திசை மீது இவனை திருப்பியது. "அம்மா" என்று அவள் தூரத்தில் கைகாட்டி அழுத்தமாய் கூறியது "கடவுள்கள் அம்மாவாக உலவுகிறார்கள்.." என்று இவன் படித்த பேஸ்புக் வாக்கியம் நினைவுக்கு வந்தது.

 நிழல் உருவம் அருகில் வரவர நிஜமும் அருகில் வந்து அமர்ந்தது. அது கார்த்திகா என்பதையும், மகளுக்கும் அவளை போலவே கன்னகுழி இருப்பதையும், அவள் முன்னாளில் அவன் காதலி என்பதையும் அதுவரை அவன் அறிந்திருக்கவில்லை. அவன் நினைவுகளில் அழகாய் இருந்த அவளின்  கன்னக்குழி, இப்போது பெரும் சோகங்களையும், இறுக்கங்களையும் கொண்டிருக்கும் புதை  குழியாகவே தோன்றியது. நீண்ட பார்வை பரிமாற்றத்திற்கு பிறகு, அவள் எந்த உணர்வுகளையும் வெளிப்படுத்தாமல் குட்டி அழகியை தூக்கிகொண்டு நடக்கவே, அவன் நினைவுகளும் முன்னோக்கி நடந்தன..

நினைவுகள் ஏழெட்டு வருடம் முன்னோக்கி நகர, இருவரும் உயர் கல்வியை ஒன்றாக பயின்று கொண்டிருக்கையில் பதிவானது  அந்த காதல். இருவருக்கும்  காதலை பற்றிய தெளிவு, சமூகம் பற்றிய தெளிவை விட அதிகமாக இருந்தது. இறுதியில் சமூக கட்டமைப்பின் குழப்பமும்,  குடும்ப அமைப்பின் பயமுறுத்தல்களும் அவளை அந்த முடிவை நோக்கி நகர்த்தியது. அவன், கடைசியாக அவள் சொன்ன வார்த்தைகளை நினைவுகூர முயன்ற போது, "அங்கிள்" என்ற அந்த குட்டி அழகியின் வார்த்தை, அவனை நிகழ காலம் நோக்கி திருப்பியது.

இத்தனை நாள் அவனின் காத்திருப்புகான முடிவையும், குடும்பம், சமூகம் வாழ்கை பற்றிய அவனுக்கான தெளிவையும், குட்டி அழகியின் கன்னங்களில் முத்தமிட்டு, மீண்டும்  "ஐ லவ் யூ" என்று சொல்லி நிறைவு செய்தான்.

Friday, November 9, 2012

தேடல்

ஒரு காபி... ராம் சரவனபனில் ஆர்டர் செய்து கொண்டிருந்த போது  மல்லிகையின் மணம் அவனை  மினி  டிபன் வாங்கிக்கொண்டிருந்த  சிகப்பு தாவணியின் மீது நிலைபெற செய்தது. சற்றே பார்த்த முகமாக இருப்பதால்  அவன் கம்ப்யூட்டர்  மூளை அது யார் என்று கூகிள் பண்ணிகொண்டிருக்க தமிழ்  மேட்ரிமோனி , சர்ச் லிஸ்டில் முதலாவதாக வந்தது. ஒ அது  அவன் ரெகுஸ்ட் செய்து காத்துக்கொண்டிருக்கும் அதே பெண். சுடிதார் போட்டோவை விடவும் அதீத அழகு தாவணியில். அவள் கண்கள் அவன் எதிர் பார்த்ததை விட வசீகரமாக இருந்தது. அவள் காது மடல்களை பற்றி அவன் பெருமூளை கருத்து  சொல்லும்போது சிறுமூளை சுரீரென அவளுக்கான திருமண அடையாளங்களை தேட சொன்னது.தேடலின் வெற்றி கண்ட களிப்போடு அவன் உரக்க சொன்ன காபியில், அவள் கண்கள் அவனை பார்வையிட்டு திரும்ப அவளருகே  வேஷ்டியுடன் ஒருவன்..
தேடல் தொடரும்...