Tuesday, December 4, 2012

நிச்சயிக்கப்பட்ட காதல் திருமணம்...

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின் ராம் அந்த ஊருக்கு செல்வது இது இரண்டாவது முறை..

சுற்றிலும் வயல்வெளி அறுவடைக்கு தன்னை தயார் படுத்திக்கொண்டு இருந்தது. அம்மாவின் ஊராய் இருந்தாலும் கிராமம் அவனுக்கு அவ்வளவு பரிச்சமில்லை. தஞ்சாவூரிலிருந்து அந்த கிராமத்திற்கு மினி பஸ்ஸில்  ஏறியபோது முற்றிலும் வேறு உலகத்திற்கு பயணிப்பதாய் உணர்ந்தான்.

யாழினியை சந்திக்க போவதை நினைத்துக் கொள்ளும் போதெல்லாம், அவன் பார்க்கும் எல்லா முகங்களும் அழகாவே தெரிந்தது. அவளுக்கு வாங்கிய அழகிய மொபைல் போனை  பார்த்துக்கொண்டே பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய போது அங்கே யாழினி கல்லூரி பேருந்துக்காக நின்று கொண்டிருந்தாள்.

கல்லூரி பேரசிரியையாய் சேலையில் அவ்வளவு அழகு. சற்றே எதிர்பாராமல் ராமை சந்தித்ததில் மகிழ்ச்சியும் ஒரு வித படபப்பும் அவள் கண்களை உயிர்புள்ளதாய் மாற்றியது. இருவரின் பார்வை புன்னகையும் பரிமாறி கொண்டவுடன் ஆரம்பமானது அந்த அழகிய உரையாடல்.

அவள் : (ஆச்சிரியத்துடன்)  எங்கே இவ்ளோ தூரம் ?

அவன் : அம்மா குலசாமி சாமி கும்பிட்டு வரசொன்னாங்க. இங்க பாத்தா,, இறங்கியவுடன் தேவதை தரிசனம்...

அவள் : (சிறு புன்னகை பாய்ச்சிவிட்டு)  உண்மையை சொல்லுங்க...

அவன் : உண்மையில் யாழினி தரிசனத்திற்காக மட்டும் தான் வந்தேன்..

அவள் : (வெட்க புன்னகையுடன்) அதுதான் தரிசனம் கிடைச்சாச்சே.. கிளம்புங்க..

அவன் : அம்மனுக்கு ஆராதனை, அர்ச்சனை எல்லாம் வேண்டாமா ?
(மொபைல் போனை நீட்டி) வாழ்கையில் எப்போதாவது  காதல் வருமா  என்று நிறைய தடவ நெனச்சிருக்கேன்.  ஆனா அது எனக்கு நிச்சயிக்கப்பட்ட போன்னு கூடவே வரும்னு நினைக்கல..  ஐ லவ் யூ..

அவள் : (வெட்கப்பட்டு, சிரித்து, காதல் பார்வையோடு.. ) . தேங்க்ஸ்.. மொபைல் நல்லா இருக்கு.. ஆனா  நீங்க பேசுறத பாத்தா உங்களுக்கு நிறைய அனுபவம் இருக்கும் போல இருக்கே..

அவன் :அட நீ வேற.. நான் இவ்ளோ பேசுவேன் என்று இன்னைக்கு உன்னை பார்க்கிற வரைக்கும் தெரியாது..  சில நேரங்களில்  நம் உதடுகள் நம் இதயங்கள் பேசுவதை சொல்லிவிடும்..

அவள் :  ஒ.. உங்க இதயம் என்னை காதலிகிறேன்னு சொல்லுதா... அதுகிட்ட ஏன்னு கேட்டு சொல்லுங்க ?

அவன் :  அது  சொல்லுது..  உன்னை விட அழகியை  அது  இன்னும் உலகத்தில் பாக்கலையாம்..  அது மட்டும் இல்லாம, உன்ன பத்தி நினைக்கும் போதெல்லாம் "உங்களில் யார் அடுத்த பிரபுதேவா" ப்ரோக்ராம்ல அது டான்ஸ் ஆடுற மாதிரியே இருக்காம்..

அவள் : (சிரித்துக்கொண்டே).. பரவாயில்லையே உங்க இதயம் பேச மட்டும் தான் செய்யும்னு நினைச்சேன்.. டான்ஸ் கூட ஆடுமா..?

அவன் :  டான்ஸ் மட்டுமா... பாட்டு கூட பாடும்.. இப்ப என்ன பாடுதுன்னு கேட்குதா? "சேலை கட்டி வந்த நிலவோ.. ஆடை கட்டி வந்த மலரோ.."

அவள் :  (ரசித்துகொண்டே)   உங்க இதயத்துக்கு பழைய பாட்டுதான் தெரியுமா?

அவன் : ஹே.. இது புதுசா ரிலீஸ் ஆகபோற ரீமிக்ஸ் பாட்டாம்..

அவள் : ஐயோ!! ஸாரி.. ஸாரி.. ரொம்ப நேரம் நின்னுன்னுகிட்டே  பேசிட்டிருகோம்.. வாங்க வீட்டுக்கு போவோம்.. ஹ்ம்ம்.. அப்பா கேட்டா நான் என்ன சொல்ல ? உண்மைய சொல்லுங்க.. எதுக்காக இந்த விசிட்?

அவன்: (சிரித்துகொண்டே) உண்மையில் உன்னை பார்கத்தான் வந்தேன்.. அப்பாவுக்காக நம்ம கல்யாண பத்திரிக்கை கொண்டு வந்திருக்கேன்..

இருவரும் கவிதையாய்  பேசிக்கொண்டே நடக்க... ரசித்துக்கொண்டே பின்தொடர்ந்தது காதல்...

No comments:

Post a Comment