Sunday, January 16, 2022

இயல் இசை கவிதைகள்

உன் முத்தத்தில் 

தொடங்குகிறது 

என் பகல்..

என் முத்தத்தில் 

உன் இரவு.


உன்னை பற்றி 

ஒன்றிரண்டு வார்த்தைகள் 

உதிர்க்காமல் 

முடிவதில்லை 

எந்தவொரு 

உரையாடல் 


பள்ளியிருந்து 

நீ கொண்டு 

வரும் 

குட்டி கதைகளுக்காக 

காத்துக் கிடக்கிறோம்'

நானும் 

என் மாலைப் பொழுதும் 


காமம் கடந்தது பெண்ணுடல்...

கற்றுத்தெளிய 

காலம் அளித்தது 

என் மகள்..


வசியம் செய்யும் 

செப்படி வித்தையை 

மொத்தமாய் கற்றுவிட்டுதான் 

பிறக்கிறார்கள் 

பூமியில் 

மகள்கள்..


உன் பிஞ்சு கரங்களால் 

என் கன்னம் தொடுகிறாய் 

புரியாத மொழியில் 

ஏதேதோ பேசிவிட்டு 

என் கழுத்தை வளைத்து 

முத்தமிடுகிறாய்..

ஆராரோ என்கிறாய்..

நான் பாட ஆரம்பிப்பதற்குள் 

உறங்கிவிடுறாய்..

நான் தான் உன் பித்தம் 

தெளிய மனமில்லாமல் 

உன்னையே பார்த்தபடி 

உயிர்த்திருக்கிறேன்..


தினமும் 

உன்னை பற்றி 

கவிதை எழுத 

வேண்டுமென்றுதான் 

நினைக்கிறேன்.

உன்னோடு நான் இருக்கும் 

நேரம் தான் கவிதை 

என்பதை 

உணராமல்..



இந்த பிரபஞ்சம் 

எனக்களித்த 

அட்சய பாத்திரம் நீ.

நீ இருக்க 

எனக்கேதடடி 

போதாமைகள்..


எங்கிருந்துதான் 

முட்டிக்கொண்டு 

வந்ததோ 

வாழ்க்கைக்கான பற்று..

நிச்சயம் 

உன்னை 

என் கைகளில் 

தாங்கிய தருணத்தில்தான் 

அது நிகந்திருக்க வேண்டும்.


உன்னை அறிவு என்பேன் 

எல்லோரும் அவரவரது 

மகளை அப்படிதான் சொல்வார்கள்..

உன்னை அழகென்பேன்..

அதற்கும் அப்படிதான் ..

ம்ம்ம்..

நீ  நான் என்பேன்..

உலகத்தில்  என்னை போல் இருப்பது 

நீ  மட்டுந்தான்.. 


உனக்கு 

சொல்லிக்கொடுப்பதற்காகவே 

படிக்கிறேன் 

இந்த உலகத்தை 

நான்..


இந்த உலகத்தில் 

நான் பல வேலைகளை 

செய்கிறேன்..

எனக்கு பிடித்து 

தினமும் ரசித்து 

நான் பார்க்கும் 

ஒரே வேலை

தகப்பனாய் 

இருப்பது 

மட்டுமே.


முதல் நாள் 

கராத்தே வகுப்பில் 

உன் குட்டிக் கை 

கால்களைத்தான் 

அசைக்கிறாய் நீ..

நான் என்னவோ 

குத்துச்சண்டையில் 

பதக்கம் வாங்கிவிட்டதாய் 

குதித்துக்கொண்டிருக்கிறேன் 

நான்.


மகள்களை 

நேசிக்கும் 

அப்பாக்களுக்கு 

மனப்பிறழ்வு 

உண்மைதான் 

போலும்..




No comments:

Post a Comment