Friday, April 9, 2021

கண்மணிகளுக்கு பிறந்த நாள் ..

 என் கண்மணிகளுக்கு பிறந்த நாள் 


கண்ணே 

கவியே 

நான் வடித்த ஓவியமே 


பெண்ணே 

பிறையே 

எனை பித்தாக்கும் 

அற்புதமே..


ஒளியே 

விழியே 

எனை  உடைக்கும் 

சிலையே 


வரமே 

வாழ்வே 

எனை மாற்றும் 

மாயாவியே 


உன்னை 

சரணடைந்து 

உனக்காக வாழும் 

பெறுவாழ்வில் 

ஏது 

போதாமைகள்..


பிறந்த நாள்  வாழ்த்துக்கள் 

இயல்  இசை 





Friday, February 12, 2021

வயசு

எல்லாவற்றையும் 

வரையறுத்துக்கொண்டே 

முன்னேறுகிறது 

வயசு..


வயதின் எண்கள் 

உயர உயர 

வார்த்தைகளில் 

வரிகள் சுருங்கிக்கொண்டே 

போகிறது..


வயதின் எந்த 

இடத்தில்  நின்று 

பார்த்தாலும் 

முந்தைய வயதுகளின் 

முட்டாள் தனங்களே 

முன் நிற்கின்றன..


தங்கி விடுதல் 

எந்த வயதிலும் 

தாக்கி விடுகிறது..


பெரும்பாலும் 

அறிவிற்கு வயதில்லை 

வயதிர்ற்கு அறிவில்லை 



Wednesday, December 9, 2020

திருமணநாள் வாழ்த்துக்கள்

 திருமணநாள் வாழ்த்துக்கள் 


யாவற்றையும் 

நகர்த்திக்கொண்டே 

போகும் நதி,

இலை மேல் எறும்புகளை
 
இழுத்துச்செல்வது போல 

நம்மையும் 

நகர்த்தி போகிறது 

வாழ்க்கை..

சாத்தியங்களின் 

நிகழ்வுகளில் 

நிகழ்ந்த அற்புதமாய் 

இன்னும் நீடிக்கிறாய் 

என்னுள் நீ..


திருமணநாள் வாழ்த்துக்கள் 

ப்ரியா 

Friday, August 7, 2020

உச்சி குடுமி..

கடந்து போகும்
எல்லா உச்சி  குடுமிகளும்
உன் ஞாபகம்
சொல்லாமல் செல்வதில்லை.

யார் பொருட்டும்
எதன் பொருட்டும்
விட்டுக்கொடுக்க முடியா
விலை மதிப்பில்லாதவற்றில்
நீ ஒருத்தி..

நேர்கொண்ட உன் அன்பை
அள்ளிக்கொள்ள கைகள்
பெருகட்டும்..

பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

Thursday, July 9, 2020

பிறந்த நாள் வாழ்த்துக்கள் மட்டும்..

ஒவ்வொரு
ஆண்டும்
நம்பை
புதுப்பிப்பதில்
உயிர்ப்பிக்கிறது
வாழ்க்கை..

இயலுடன் 
இசை சேர
ஆனந்த
நாடகமான
உன் வாழ்க்கைக்கு 
எத்தனை கவிதை
கொட்டியும்
இட்டு நிரப்ப
முடியா
ஏமாற்றத்தில்

பிறந்த நாள்
வாழ்த்துக்கள்
மட்டும்..

ப்ரியா..

Friday, April 10, 2020

மனதில் நின்ற தருணங்கள்.. -- துளிர்


கைகளில்
தவழ்ந்தவள்
கண்முன்னே
வளர்வது
என்றென்றும்
பேருவகையே..

அளவில்லா
நிறைவோடும் 
அன்பான
உறவோடும்
எல்லா வளமோடும்
இன்பமாய்
வாழ்ந்துவிடு..

பிறந்த நாள்
வாழ்த்துக்கள்
துளிர்..

Thursday, April 9, 2020

அன்பு மகள்..

மகளை பற்றிய
மனதில் நின்ற தருணங்களை
எழுத எத்தனிக்கும்
போதெல்லாம்..
எனையறியாமல்
கலங்கி
விடுகிறேன் நான்.

தினமும்
கண் விழித்து
எனை கண்டவுடன்
கட்டிக்கொள்ளும்
நேரமெல்லாம்
இனிக்கிறது..

சேர்ந்து குளிக்கும்
நேரங்களில்,
அவள் என் தலையில்
தேய்க்கும் சோப்பு
நுரையாய் பொங்குகிறது,
அவளை பற்றிய
நினைவு என்னில்.


பிழையோடு அவள்
பேசும் வார்த்தையும்,
பாடும் பாட்டும்
அச்சில் ஏறா
கவிதையாய்,
அவளோடு
ஆடுகிறது
மனதில்.

சொல்லிக்கொடுக்காத
ஒன்றை அவள்
சொல்லும்போது
சுர்ரென உரைக்கிறது,
அவளின்
உலகத்திற்கான
கவனம்..

அவள்  கொள்ளும்
சின்ன கோவமெல்லாம்
சொல்லி முடிக்க
எங்கு தேடியும்
கிடைக்கவில்லை
சொற்கள்.

என்னோடு அவள்
விளையாடும்
கண்ணாமூச்சியில்
மீண்டும் மீண்டும்
தொலைய துடிக்கிறேன்
நான்.

முத்தமிட்டு அவளை
உறங்க வைக்க..
என் கழுத்தை
கட்டிக்கொண்டு
"இன்னும் கொஞ்ச நேரம்
 விளையாடுவோம்னு"
சொல்லும்போது..
விடியா இரவு வேண்டி
விழித்துக்கிடக்கிறது மனது..

இமைக்கும் நொடிகளுக்குள்
இரண்டு வருடங்கள்
கடந்து விட்டாள் இயல்..

இயலோடு இசை சேரும்
பேரனுபவத்திற்காக
மனம் கொள்ளா ஆவலுடன்
காத்திருக்கிறேன்
நீ பிறந்த இந்நாளில் நான்..